×

உத்தரகாண்ட் சுரங்கத்தில் 11 நாளாக சிக்கி தவிப்பு; 41 தொழிலாளர்கள் 2 நாட்களில் மீட்கப்படுவார்கள்: அரசு அதிகாரி தகவல்

உத்தரகாசி: உத்தரகாண்ட் சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கி இருப்பது 11வது நாளை எட்டியுள்ளது. அவர்கள் அனைவரும் அடுத்த 2 நாட்களில் மீட்கப்பட்டுவிடுவார்கள் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா பகுதியின் மலைப்பகுதியில் சுங்கப்பாதை அமைக்கும் நடைபெற்று வந்தது. அங்கு கடந்த 12ம் தேதி வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதியில் மண், பாறைகள், கற்கள் சரிந்து விழுந்தன. இதனால் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர்.

இதுகுறித்து அம்மாநில மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த அவர்கள் உள்ளே சிக்கி இருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதற்கான முயற்சியில் இறங்கினர். அதற்காக 4 அங்குலம் அகலம் கொண்ட குழாய் உள்ளே வைக்கப்பட்டது. அதன்மூலம், அவர்களுக்கு உணவு மற்றும் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று உணர்ந்துகொண்ட மீட்பு படையினர் அவர்களை வெளியே கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி, முதலில் 60 மீட்டர் தூரத்திற்கு துளையிட்டு குழாய்கள் மூலம் அவர்களை மீட்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஆகர் என்ற துளையிடும் கருவி 24 மீட்டர் சென்றபோது அங்கிருந்த பாறையின் மீது பலமாக மோதியது.

இதனால் ஏற்பட்ட அதிர்வு காணரமாக மேலும் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த முயற்சி உடனடியாக கைவிடப்பட்டது. இதையடுத்து மனம் தளராத மீட்பு படையினர் 6 அங்கும் அகலம் கொண்ட குழாயை உள்ளே நுழைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அவர்களின் இந்த முயற்சிக்கு நேற்று முன்தினம் பலன் கிடைத்தது. புதியதாக செருகப்பட்ட குழாய் மூலம் தொழிலாளர்களிடம் பேசுவது, அவர்கள் உள்ளே எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்ப்பது தற்போது எளிதாகி உள்ளது. இந்த இடைக்கால வெற்றி அனைவருக்கும் ஆறுதலை தந்துள்ளது. மேலும், தொழிலாளர்களிடம் அவரது குடும்பத்தினர் மற்றும் மீட்பு படையினர் பேசிய காட்சி நேற்று வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் மீட்பு பணி குறித்து அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆகர் துளையிடும் கருவிதான் தற்போது சிறந்த ஒன்றாக உள்ளது. இதனை வைத்து 2 வது முறையாக துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அடுத்த 2 நாட்களுக்குள் 41 தொழிலாளர்களையும் மீட்டுவிடலாம். இந்த முயற்சி பலனளிக்கவில்லை என்றால் அவர்களை மீட்பது மேலும் 15 நாட்கள் கூட ஆகும்,’என்றார்.

எங்க அம்மா கிட்ட சொல்லாதீங்க…
சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களுடன், அவரது குடும்பத்தினர் மற்றும் மீட்பு படையினர் பேசினர். இதுதொடர்பான ஒரு வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. அதில், தொழிலாளி ஒருவர், ‘ நான் உள்ளே நலமாக இருக்கிறேன். இங்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் சுரங்கத்தில் சிக்கி இருக்கிறேன் என்று எனது அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள். அவர்களால் இதனை தாங்கி கொள்ள முடியாது,’என்று பேசி இருந்தார். இந்த வீடியோ பலரது கண்களையும் குளமாக்கி உள்ளது. அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

The post உத்தரகாண்ட் சுரங்கத்தில் 11 நாளாக சிக்கி தவிப்பு; 41 தொழிலாளர்கள் 2 நாட்களில் மீட்கப்படுவார்கள்: அரசு அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Uttarakasi ,Dinakaran ,
× RELATED பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல்...